×

சேதமான காட்சி கோபுரம்; உடைந்த இருக்கைகள்: சங்குத்துறை பீச் அழகுபடுத்தப்படுமா?

* சுற்றுலா பயணிகள் ஆர்வம்
* அதிகாரிகள் கவனிப்பார்களா?

நாகர்கோவில்: சங்குத்துறை பீச்சில் உடைந்து கிடக்கும் காங்கிரீட்டாலான இருக்கைகள், காட்சிகோபுரத்தை சீரமைத்து சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் பீச்சை மீண்டும் அழகுபடுத்தி பாதுகாப்பை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து இருக்கிறது. குமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலாத்தலமாக கன்னியாகுமரி உள்ளது. சீசன் காலம் என்று இல்லாமல் அனைத்து நாட்களில் இங்கு சுற்றுலா பயணிகளை பார்க்க முடிகிறது. கடல் நடுவே உள்ள விவேகானந்தர் பாறை, 133 அடி உயர திருவள்ளுவர் சிலை ஆகியவற்றை காண சுற்றுலா பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கன்னியாகுமரிக்கு வந்து செல்லும் சுற்றுலா பயணிகள் அருகில் உள்ள பீச் பகுதிக்கு செல்வதற்கும் மறப்பதில்லை.

அந்த வகையில் சுற்றுலா பயணிகளின் மத்தியில் பிரபலமானதாக இருக்கிறது சொத்தவிளை, சங்குத்துறை பீச்சுகள். இங்கும் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் வந்து செல்கின்றனர். அவர்களை கவரும் வகையில் பீச் பகுதியில் காட்சி கோபுரங்கள், நவீன வகையிலான இருக்கைகள் ஆகியவை அமைக்கப்பட்டுள்ளன. நாளடைவில் போதிய பராமரிப்பு இல்லாததால் இந்த பீச் பகுதிகள் பொலிவிழந்து காணப்படுகின்றன. சங்குத்துறை பீச்சில் சுற்றுலா பயணிகளின் நலன் கருதி காங்கிரீட் இருக்கைகள் அமைக்கப்பட்டு இருந்தன. தற்போது அந்த காங்கிரீட் இருக்கைகள் உடைந்து சுக்கு நூறாக கிடக்கிறது.

இதேபோல் பீச் பகுதி முழுவதையும் கண்டு ரசிக்கும் வகையில் ராட்சத காட்சி கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த காட்சி கோபுரத்தின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. காங்கிரீட்டுகள் ஆங்காங்கே பெயர்ந்து கம்பிகள் வெளியே தெரிய தொடங்கி உள்ளன. கைபிடி சுவர்கள் இடிந்து விழுந்து கிடக்கிறது. போதிய பராமரிப்பு இல்லாததால் காட்சி கோபுரம் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழலாம். ஆகவே சுற்றுலா பயணிகள் காட்சி கோபுரத்தின் மேல் பகுதிக்கு செல்வதை தவிர்த்து வருகின்றனர். இருப்பினும் ஒருசிலர் மேல் பகுதிக்கு செல்வதை பார்க்க முடிகிறது. ஆனால் அவர்களது உயிருக்கு உத்தரவாதம் இல்லை என்ற நிலைதான் காணப்படுகிறது.

எப்போது வேண்டுமானாலும் அந்த காட்சி கோபுரம் சாய்ந்து விழலாம். இதனால் சுற்றுலா பயணிகளின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்பது உறுதி. தற்போது அந்த காட்சி கோபுரம் குடிமகன்கள் மற்றும் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது குறிப்பிடத்தக்கது. இதேபோல் பீச்சின் முக்கியத் துவத்தை விளக்கும் வகையில் முன் பகுதியில் ராட்சத சங்கு வைக்கப்பட்டு உள்ளது. இந்த சங்கும் தற்போது சேதமாகி கீழே விழும் நிலையில் உள்ளது. அதேபோல் காட்சி கோபுரத்தின் தரை பகுதியில் உள்ள மண் கடலரிப்பால் அரித்துச் செல்லப்பட்டுள்ளது. இதனால் தரையின் கீழ் உள்ள காங்கிரீட் பில்லர்கள் வெளியே தெரிகிறது.

இது குறித்து சுற்றுலா பயணிகள் கூறியது: சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் சங்குத்துறை பீச்சை அழகுபடுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முன் வரவேண்டும். காட்சி கோபுரத்தின் நிலையை பார்க்கும் போது குடிமகன்கள் கும்மாளமிடுவது தெரிகிறது. ஆகவே சங்குதுறை பீச்சுக்கு செல்லும் சுற்றுலா பயணிகளின் நலனை கருதி அங்கு போலீஸ் பாதுகாப்பு போட வேண்டும். சங்குத்துறை பீச்சுக்கு குடும்பமாக சென்று வருகின்றவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. ஆகவே சுற்றுலா பயணிகளின் நலன் கருதி அங்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது.

ஆனால் நாளடைவில் அவை முறையாக பராமரிக்கப்படாததால் பீச் பகுதி அலங்கோலமாக உள்ளது. ஆகவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்தி மீண்டும் சங்குத்துறை பீச்சை அழகுபடுத்த முன் வரவேண்டும். இவ்வாறு கூறினர்.

Tags : viewing tower , Damaged viewing tower; Broken Seats: Will Conch Beach Be Beautified?
× RELATED அச்சப்படவைக்கும் காட்சி கோபுரம்,...